மதுரை நாயக்க வம்சம்

விமலதர்ம சூரியாவின் ஆட்சி தொடங்கி அடுத்து வந்த இருநூறு வருடங்கள் போர்த்துக்கீசியருக்கும் கண்டிக்கும் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருந்தது. இதில் சிலசமயம் டச்சுக்காரர்கள் சில சமயம் டேனிஷ்காரர்கள், கண்டிக்கு உதவி  செய்தார்கள். நடுவில் போர்த்துக்கீசியர் சில காலம் கண்டியை பிடித்தும் வைத்திருந்தார்கள். விமலதர்மாவிற்குப் பின் அவருடைய உறவினர் சேனரத்தனா, அவர் மகன் இரண்டாம் ராஜசின்ஹா, அவன் மகன் இரண்டாம் விமலதர்ம சூரியா, அவன் மகன் வீரநரேந்திர சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஆண்டனர்.  அதுவரைக்கும் எந்த வாரிசு பிரச்சனையும் எழவில்லை. ஆனால் வீரநரேந்திர சின்ஹா 1739ல் இறந்த போது வாரிசுப்பிரச்சனை ஆரம்பித்தது. இவனுக்கு 'யுனம்புவே பண்டாரா' என்ற மகன் இருந்தான். ஆனால் இவனை வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால் இவன் சிங்களத்துணைவிக்குப் பிறந்தவன். அதோடு அந்தச் சிங்களப்பெண் அரச வம்சத்தைச் சேராத ஒரு குறைந்த சாதி பெண் கண்டி ராஜ்ஜியத்தில் தந்தை மற்றும் தாய் இருவரும் ஷத்திரிய குலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாரம்பரியத்தை காலங்காலமாக பின்பற்றி வந்தனர். இந்தப் பிரச்சனையை சமாளிக்க அங்கிருந்த புத்தபிக்கு வெளிவிட்டா சரங்கரா, நரேந்திரனின் மூத்த மனைவியருள் ஒருவரின் சகோதரனை மன்னனாக்கினார். அந்த மனைவி தமிழும் தெலுங்கும் பேசும் மதுரை நாயக்க மன்னரின் குடும்பம் என்பதால் அப்போதிருந்து ஒரு புதிய வம்சம் கண்டியை ஆரம்பித்தது. அதன் முதல் மன்னன் ஸ்ரீ விஜயராஜ சின்ஹா என்பவன்.

இப்படித்தான் மதுரை நாயக்க வம்சம் கண்டியை ஆள ஆரம்பித்தது. இப்பொழுதும் இந்த நாயக்க வம்சப் பெயர்கள் சில சிங்களப் பெயர்களில் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். பண்டார நாயகே என்பது அதில் ஒன்று. விஜயராஜ சின்ஹாவும் அவனுக்குப்பின் வந்தவர்களும் முக்கிய பதவிகளில் நாயக்கர்களை நியமித்ததால் ஆங்காங்கே எதிர்ப்புகளும் பிரச்சனைகளும் எழுந்தன. ஆனால் இவர்கள் புத்த மதத்தையும் கண்டி கலாச்சாரத்தையும் தொடர்ந்து பின்பற்றியதால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.

டச்சுக் காரர்களுடன் ஒரு பக்கம் சண்டை நடந்து கொண்டே இருந்தது. அதன்பின் டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பு முடிந்து பிரிட்டிஸாரின் ஆதிக்கம் ஆரம்பமானது. திரிகோண மலையில் ஆரம்பித்து பாட்டிகலோவா, யாழ்ப்பாணம் என்று பிடித்துக் கொண்டே போனார்கள். கண்டியோடு முதலில் ஒரு ஒப்பந்தம் இருந்தது. “மிகஸ்டென்னே திசாவோ” என்ற கண்டியின் தூதர் சென்னை வரை வந்து இந்த ஒப்பந்தம் போட்டதால் கண்டிக்கு ஆபத்து இல்லாமல் இருந்தது. இது கீர்த்தி ஸ்ரீ ராஜசின்ஹாவின் ஆட்சியில் நடந்தது. ஆனால் அவனுக்குப்பின் வந்த அவன் தம்பி ஸ்ரீ ராஜாதி ராஜசின்ஹா இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து தன்னிச்சையாக ஆள முயன்றான். அதனால் பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கண்டியின் பகுதிகளை பிடிக்க முயன்றார்கள். 1798ல் பிரடெரிக் நார்த் என்பவர் பிரிட்டிஸின் கவர்னராக இலங்கையில் நியமிக்கப்பட போது  இது வேகமெடுத்தது. இதற்கிடையில் ராஜாதி ராஜசின்ஹா 1798ல் வாரிசு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான். வாரிசு இல்லாட்டிதான் நாந்தேன் வாரிசுன்னு வந்துருவானே வெள்ளைக்காரன்.  

The court of King Vikramasingha 

முதல் மந்திரியா இருந்த பிலிமா தளவாய் பிரிட்டிஷ் உதவியோடு அதிகாரத்தை கைப்பற்றி இறந்து போன மன்னனின் உறவினனான 18 வயதான கொன்னசாமி என்பவனை ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹா என்ற பெயரில் அரியணை ஏற்றினான். அதற்கு எதிர்ப்புச் செய்த முத்துச்சாமியை குடும்பத்தோடு சிறையில் அடைத்தான். ஆனால் எதிபார்த்ததிற்கு மாறாக விக்ரம ராஜசின்ஹா தளவாய் பேச்சையோ பிரிட்டிஷ் பேச்சையோ கேட்காமல் சுதந்திரமாய் ஆள ஆரம்பித்தான். அந்த தளவாய்,”அடடா தப்புப் பண்ணிட்டோமே”, நாமே அரியணையைக் கைப்பற்றியிருக்கலாமே என்று நினைத்து திரும்பவும் பிரிட்டிஷாரின் உதவியை அணுகினான். இந்த மாதிரி காட்டிக் கொடுக்கும் கயவாளிகள் இருக்கும் வரை சுதந்திரமா இருக்க முடியுமா? சண்டை ஆரம்பித்தது. விக்கிரம ராஜசின்ஹா சுமார் 2 ஆண்டுகள் வரை பிரிட்டிஸிக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தான். இதனைத்தான் முதலாவது கண்டிப் போர் என்று சொல்லுகிறார்கள். 

ஒரு சமயம் மலேயா தளபதி சங்குன்குலோவின் தலைமையில் கண்டியைப் பிடித்து நான் முன்ன சொன்னேனே அந்த முத்துச்சாமி என்ற வெத்துச் சாமி கையில் ஆட்சியை ஒப்படைத்தனர். அவர்கள் கண்டியில் நுழையும்போது ஒரு ஈ எறும்பு கூட அங்கே இருக்கவில்லை. ஆனால் கொரில்லா புத்தம் ஆரம்பித்தது. கொஞ்ச நாளில் மீண்டும் விக்கிரம ராஜசின்ஹனா கண்டியை மீட்டுக் கொண்டான். அதன்பின் வெகுண்டெழுந்த பிரிட்டிஷ் கவர்னர், கண்டியின் சிறுசிறு பகுதிகளின் தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பெரும் படையுடன் நுழைந்து கண்டியைப் பிடித்து 1815ல் விக்ரம ராஜசின்ஹாவை இந்தியாவுக்கு நாடு கடத்தினான். அவன் அங்கேயே சிறைப்படுத்தப் பட்டு 1832ல் இறந்து போனான். அவனுடைய ஒரே மகனும் 1843ல் இறந்துபோக மதுரை நாயக்கர்களின் கண்டி ஆட்சி முடிந்து போனது. இதுல ராஜாவைச் சிறைப்பிடித்தது. அவனுடைய சொந்த நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த படையாகும்னு சொன்னா அது பெரிய வெட்கக் கேடான விஷயம். அதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளைத் துவங்கியது. இலங்கை முற்றிலுமாக பிரிட்டிஷ் காலனியாக மாறிப்போனது.

Vikrama Rajasinga Naidu, the Last Nayak King of Kandy with his wife

இலங்கேஸ்வரன் என்னும் பூபதி என்றும் அழைக்கப்பட்ட கண்டி அரசர்களின் கதை இப்படி முடிந்து போனது. நாயக்க மன்னர்களின் ஆட்சியில் மன்னரின் பாதுகாப்புப்படை முழுவதும் தமிழ் வீரர்களாய் இருந்தார்கள். நாயக்க மன்னனும் தமிழ் பேசுபவனாக இருந்தான். தனிப்பட்ட அதிகாரம் இருந்தாலும் மன்னன் புத்த பிக்குகளுக்கு கட்டுப்பட்டவன் ஆவான்.  அவர்களின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் அதுதவிர நாட்டின் பல பகுதிகளில் இருந்த குழுக்களின் தலைவர்களும் ஆட்சியின் முக்கிய அங்கமாக இருந்தனர்.

புத்த பிக்குகளை உதாசீனம் செய்ததால்தான் விக்ரம ராஜசின்ஹாவை அவர்கள் பிரிட்டிஷ் துணையுடன் ஒழித்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள்.  உள்ளூர்க்காரனைப் பகைத்து வெள்ளைக் காரனுக்கு வழிவிட்டதால் அவன் முழு இலங்கையையும் பிடித்து ஆண்டது வரலாறு. அதன்பின் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்தான் இலங்கைகும் கிடைத்தது.

Comments

Popular posts from this blog

One of my favourite 'மகாகவி பாரதியார்'

THE UNDEFEATABLE GREAT WARRIOR

"நாவலன் தீவு " - "குமரிப் பெருங்கண்டம்"